Published : 25 Dec 2024 06:02 PM
Last Updated : 25 Dec 2024 06:02 PM
மதுரை: கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கூலிப், குட்கா, புகையிலை பொருட்களை மதுரை புதூர் பகுதியில் போலீஸார் மடக்கி பிடித்தனர்.
மதுரை நகரில் காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில், கஞ்சா,போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை தடுக்க மாநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில், மாநகர துணை ஆணையர் கருண் கராட் மேற்பார்வையில் உதவி ஆணையர் சிவசக்தி, புதூர் காவல் ஆய்வாளர் மாடசாமி அடங்கிய குழுவினர் சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் நேற்று முன்தினம் இரவில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக சென்ற கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்றை சந்தேகத்தில் தடுத்து நிறுத்தினர். ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். லாரியை போலீஸார் சோதனையிட்டபோது, சிறுவர்களுக்கான அழகு சாதனப் பொருட்கள், சோப்பு, கோழித் தீவனம் , கால்நடை மருந்துகள் பாசல்களுக்கு இடையில் தடை செய்யப்பட்ட கூலிப், குட்கா , புகையிலை பொருட்களை கடத்துவது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், கன்டெய்னர் லாரியை பின் தொடர்ந்த கார், 2 வேன்களும் சிக்கின. இதைத்தொடர்ந்து புதூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர் லாரியை முழுவதுமாக ஆய்வு செய்தபோது, தலா 1500 பாக்கெட்டுகளை கொண்ட 85 மூட்டைகளில் குட்கா, தலா 500 பாக்கெட் கொண்ட 7 மூட்டை கூலிப், தலா 500 பாக்கெட் அடங்கிய 7 மூட்டை புகையிலை என, ஒன்றரை டன் எடையிலான பொருட்களை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்தது தெரிந்தது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர் பெங்களூர் சிகானிபகுதியச் சேர்ந்த கோபிநாயக் மகன் சதீஸ்நாயக் (25), தருமபுரி மாவட்டம், தோப்பூர் வெங்கடாசலம் மகன் பழனிச்சாமி (27), கார் ஓட்டுநர் சேலம் மேச்சேரி பச்சையப்பன் மகன் கிருஷ்ணமூர்த்தி ( 38),மேச்சேரி தனராஜ் மகன் சக்திவேல் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்டெய்னர் லாரியில் இருந்து குட்கா, புகையிலை பொருட்களை பிரித்து மதுரை நகர், தென்மாவட்ட பகுதிக்கு கொண்டு செல்வதற்கு வந்த 2 வேன்களும், மதுரையில் வைத்து குட்கா, புகையிலையை வியாபாரிகளுக்கு பிரித்து கொடுக்க 2 பேர் வந்த காரும் பறிமுதல் செய்தனர். காரில் வந்த ஒருவர் தப்பிய நிலையில் அவரை தேடுகின்றனர். பறிமுதல் செய்த கூலிப், குட்கா, புகையிலை பாக்கெட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என, காவல் ஆய்வாளர் மாடசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT