Published : 25 Dec 2024 04:42 PM
Last Updated : 25 Dec 2024 04:42 PM
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பெயரளவில் நடத்தக் கூடாது என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை டிச.27, 28 தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ''ஒவ்வொரு ஊதிய ஒப்பந்தத்திலும் சிஐடியு ஒரு இலக்கை தீர்மானிப்போம். அந்த வகையில் அனைவருக்கும் ஓய்வூதியம், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றை அரசிடம் நிர்பந்திக்க இருக்கிறோம்.
ஏற்கெனவே ஊதிய ஒப்பந்தம் முடிந்து 15 மாத கால தாமதம் ஆகிவிட்டது. எனவே, இதற்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும். கடந்த ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டவையும் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதற்கான தீர்வும் எட்டப்பட வேண்டும். வாரிசு வேலை, காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வது போன்றவற்றை வலியுறுத்துவோம்.
பொதுவாக வைத்த கோரிக்கை என்பது ஒரு பக்கம் இருக்கிறது. மறுபுறம் வைத்த கோரிக்கைகளில் முறையான முடிவை எடுக்க வேண்டும். பெயரளவுக்கான பேச்சுவார்த்தையாக நடத்தக் கூடாது. பேச்சுவார்த்தையை திறந்த மனதோடு அரசு நடத்த வேண்டும். இதில் ஏதேனும் குளறுபடி செய்தால் மேலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT