Published : 25 Dec 2024 03:44 PM
Last Updated : 25 Dec 2024 03:44 PM

நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்: முத்தரசன் பேட்டி

ஆர்.நல்லகண்ணு.

சென்னை: "இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கிய நாள், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழா சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நாளை (டிச.26) தொடங்குகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்" என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முத்தரசன், ''இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழாவும் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளும் கட்சி தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நாளை (டிச.26) காலை 9 மணியளவில் தொடங்குகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி கான்பூரில் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நாளும், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும் ஒரே ஆண்டு, மாதம், தேதியில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி கட்சி தொடங்கப்பட்ட கான்பூரில் நடைபெறும் விழாவில் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் விழாவில், கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியேற்றி நூற்றாண்டு விழாவை தொடங்கிவைக்கிறார். அதையடுத்து நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆர். நல்லகண்ணுவை கவுரவித்து வாழ்த்திப் பேசுகிறார். இக்கூட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். அதுபோல தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்றப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

கம்யூனிஸ்டு கட்சிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''ஒன்றாக இருந்த கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே 1964-ல் பிளவு ஏற்பட்டது. அது நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சி செய்கிறது. தற்போது நாடு இருக்கும் நிலையை அனைவரும் அறிவர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத பாஜக சர்வாதிகாரம், பாசிச கொள்கைகளைக் கொண்டது. நாட்டை பாசிச பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முற்படுகின்றனர்.

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு உரிய முறையில் வரி பகிர்வு நிதியைக் கொடுப்பதில்லை. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கேரளா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்கவில்லை. வயநாடு பேரிடரை நேரில் வந்து பார்த்த பிரதமர் மோடி, உரிய நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், ஒரு பைசாகூட தரவில்லை.

நாட்டு மக்களுக்கு எதிராக பாஜக செயல்படும் இந்த வேளையில், கம்யூனிஸ்டு கட்சிகள் பிளவுபட்டு செயல்படுவது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லதல்ல. எனவே, கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொருத்தவரை 1964-ம் ஆண்டுக்கு முந்தைய நிலை வர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x