Last Updated : 25 Dec, 2024 03:31 PM

 

Published : 25 Dec 2024 03:31 PM
Last Updated : 25 Dec 2024 03:31 PM

சென்னை உணவுத் திருவிழா நிறைவு: 3.20 லட்சம் பேர் வருகை - ரூ.1.50 கோடிக்கு விற்பனை

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் சென்னை உணவுத் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. மொத்தம் 5 நாட்கள் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் பேர் வருகை தந்து, ரூ.1.50 கோடிக்கு உணவுகள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 65 சுய உதவிக் குழுக்களின் சார்பாக 35 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல் 7 தயார் நிலை உணவு அரங்குகள் மூலம் ராகி, தினை லட்டுகள், நாட்டுச் சர்க்கரை எள்ளுருண்டை, கருப்பு கவுனி அரிசி லட்டு, திண்டுக்கல் காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா போன்ற 520 வகையான ஆயத்த உணவு பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உணவுத் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வருகை தந்து சென்னையில் கிடைக்காத பலதரப்பட்ட உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரபலமான உணவுகளை அங்கு சென்று சாப்பிடமுடியாத குறையை இந்த உணவுத் திருவிழா போக்கியிருக்கிறது. இந்நிலையில் உணவுத் திருவிழாவின் கடைசி நாளான நேற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 5 நாட்கள் நடைபெற்ற சென்னை உணவுத் திருவிழாவுக்கு மொத்தம் 3.20 லட்சம் எண்ணிக்கையிலான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். மொத்தம் ரூ.1.50 கோடிக்கு சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள், உணவுகள் விற்பனையாகி உள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x