Published : 25 Dec 2024 05:45 AM
Last Updated : 25 Dec 2024 05:45 AM

பெரியார் 51-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை

பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், கனிமொழி எம்.பி., கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 51-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அண்ணா சாலையில் பெரியார் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில்
கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்,
பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

தமிழக வெற்றி்க் கழகத் தலைவர் விஜய், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்க கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சம நிலை, மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர். தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர். கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை அவர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள்
அண்ணா சாலையில் பெரியார் படத்துக்கு
மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தீண்டாமையை ஒழிப்பதிலும், பெண்ணடிமையை அகற்றுவதிலும், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதிலும், தமிழ் மொழியை பாதுகாப்பதிலும் முன்னோடிகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவுதினம் இன்று.

ஒப்பற்ற தலைவராக, தலைசிறந்த சிந்தனையாளராக, தத்துவ மேதையாக, சமூக சீர்திருத்தவாதியாக, சமுதாய புரட்சியாளராக என தமிழகத்துக்கு பெரியார் ஆற்றிய தொண்டுகளையும், அவரால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பெரியாரின் உருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x