Published : 25 Dec 2024 01:13 AM
Last Updated : 25 Dec 2024 01:13 AM
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற வன்முறையைத் தவிர்த்து ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று பொறுமையையும், ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதை கொடுத்து விடுங்கள் என்று ஈகையையும், பகைவர்களையும் நேசியுங்கள், என இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
போர்கள், வெறுப்புணர்வால் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் இயேசு கிறிஸ்து காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற இயேசு பிரானின் போதனைகளை மனதில்கொண்டு அனைவரையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். தேவகுமாரன் இயேசு பிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை: மக்களுக்கு சேவை செய்வதுதான் கிறிஸ்தவத்தின் முதன்மை நோக்கம். அத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்கள் மீது மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இயேசுபிரானின் போதனைகளை சிரமேற்கொண்டு அனைத்து மத மக்களையும் சகோதர மனப்பான்மையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் மக்கள் பணியாற்றி வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வெறுப்பவர்களையும் நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் அமுதமொழியை மனதில்கொண்டு இந்தியாவில் மதச்சார்பின்மையையும், சமயநல்லிணக்கத்தையும் பாதுகாக்க கிறிஸ்துமஸ் திருநாளில் உறுதியேற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இயேசுபிரான் விரும்பியதைப்போல உலகில் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். அதன் மூலம் உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். இவற்றை நனவாக்க உழைப்போம் என கிறிஸ்துமஸ் திருநாளில் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இயேசு கிறிஸ்து கூறியதுபோல் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையும் வளர்ப்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அன்பின் திருவுருவமாகவும், கருணையின் மறுவடிவமாகவும் திகழும் இயேசுபிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய நற்குணங்களைப் பின்பற்றி சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாகவும் வாழ இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கோகுல மக்கள் கட்சி நிறுவனர் எம்.வி.சேகர் யாதவ், இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் எம்.எஸ்.மார்டின், பாஜக பிரமுகர் நடிகர் சரத்குமார், தமிழ்நாடு ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT