Published : 25 Dec 2024 12:49 AM
Last Updated : 25 Dec 2024 12:49 AM

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த வேண்டும், காளைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், 2025-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் சத்யபிரத சாஹு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.

விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக, தொடர்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும், இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, விழா குழுவினர், காளை உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே அனைவரும் செயல்பட வேண்டும்.

போட்டி நடைபெறும் களத்தில் இருந்து காளைகள் வெளியேறும் இடத்தில், கால்நடை மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவர்கள் வழங்க வேண்டும். போட்டி நடைபெறும் களத்துக்குள் பார்வையாளர்களும், வெளிநபர்களும், வீரர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இருக்க அனுமதியில்லை. அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடுதல் என அனைத்து போட்டிகளுக்கும் பொருந்தும். இவற்றைப் பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x