Published : 24 Dec 2024 10:05 PM
Last Updated : 24 Dec 2024 10:05 PM
சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று (டிச.24) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
அவரும் சினிமாவுக்கு சென்று தான் ஒரு நடிகன் என்று நிரூபித்தால் அது சண்டை போடுவதற்கான ஒரு வழி என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ரேவந்த் ரெட்டி தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். மக்களுக்கு சேவை செய்யத்தான் உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அல்லு அர்ஜுன் தன் மீது தவறு இருப்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்ட பிறகும் கூட அவரை துன்புறுத்துவது, சட்டப்பேரவையில் அவரது பெயரை குறிப்பிட்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தியேட்டருக்கு வந்தால் யாரேனும் உயிரிழப்பார்கள் என்பது அல்லு அர்ஜுனுக்கு தெரியுமா? இந்த விவகாரத்தில் அவரை பலிகடா ஆக்குவது நல்லதல்ல. சட்டம் என்பது அனைவருக்கும் சமம். ஆனால் அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி பேசியதில் வெறுப்பை மட்டுமே நான் பார்க்கிறேன். அவரது வார்த்தைகளில் நடுநிலைமை இல்லை” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
நடந்தது என்ன? - அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 13-ம் தேதி அல்லு அர்ஜுனை போலீஸார் கைது செய்தனர். என்றாலும் அன்றைய தினமே தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. டிசம்பர் 14ம் தேதி காலையில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். புஷ்பா 2 தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை உஸ்மானியா பல்கலை. மாணவர்கள் எனக் கூறிக்கொண்ட குழு ஒன்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரி நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டைத் தாக்கியது. தக்காளி வீசி, பூந்தொட்டிகளை உடைத்து சொத்துகளைச் சேதப்படுத்தியது. இதுதொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவருக்கும் ஹைதராபாத் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT