Last Updated : 24 Dec, 2024 06:49 PM

1  

Published : 24 Dec 2024 06:49 PM
Last Updated : 24 Dec 2024 06:49 PM

கோவை மெட்ரோ ரயில் திட்ட ஆயத்தப் பணிகள் தொடக்கம்: சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் தகவல் 

கோவை மெட்ரோ ரயில் திட்ட ஆயத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக திட்ட வழித்தடத்தை பார்வையிடும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நில ஆர்ஜிதம், மழைநீர் வடிகால் மாற்றி அமைத்தல் ஆகிய ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சிஎம்ஆர்எல்) நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''கோவை மாநகர பகுதியில் 34.8 கிலோ மீட்டர் தொலைவில் 2 வழித்தடங்களுடன் 32 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிஎம்ஆர்எல் மூலம் விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. சமீபத்தில் மத்திய அரசு, சில கூடுதல் அறிக்கைகளை கேட்டது. தற்போது அந்த விவரங்கள் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்புதலை எதிர்பார்த்துள்ளோம்.

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை கோவை, மதுரைக்கு ஒருங்கிணைந்த திட்டமாகச் சமர்ப்பித்துள்ளோம். இத்திட்டம் கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரைக்கு ரூ.11,340 கோடியிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக நில ஆர்ஜித பணிகள், சாலைகளில் மழைநீர் வடிகால், மின் கேபிள் ஆகியவைகளை முறையாக மாற்றிடும் வகையில் ஒன்றரை ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பணிகள் வரை நடைபெறும். இதற்கான ஆயத்தப்பணிகளை தற்போது தொடங்கி உள்ளோம்.

மெட்ரோ ரயில் திட்ட முதற்கட்ட பணிகள் ஜனவரி, பிப்ரவரியில் தொடங்கப்படும். மெட்ரோ திட்ட பணிகள் 100 முதல் 150 ஆண்டுகளுக்கான போக்குவரத்து கட்டமைப்பு வசதியைக் கொண்டது. மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 10 ஹெக்டரிலும், நீலாம்பூரில் பணிமனைக்காக 16 ஹெக்டரிலும் நில ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. எங்கெல்லாம் நிலம் தேவைப்படுகிறதோ அங்கு எடுக்கப்படும்.

இத்திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்படும். அவிநாசி வழித்தடத்தில் லீ மெரிடியன் ஹோட்டல் வரை வந்து விமான நிலையத்திற்கு திரும்புவது போல வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் நீலாம்பூரை தாண்டி எல் அன்ட் டி சாலை வரை விரிவாக்கும் திட்டமும் உள்ளது. மேலும் மேட்டுப்பாளையம், திருச்சி ஆகிய சாலைகளில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தக்கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கோவையில் அவிநாசி வழித்தடத்தில் மேம்பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைத்தும், சக்தி வழித்தடத்தில் சாலையின் நடுவே மேம்பால தூண்கள் அமைக்கப்படும்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கோவையில் புதியதாக வடிவமைத்து செயல்படுத்த உள்ளோம். நெடுஞ்சாலை துறை பணிகள், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகளை திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளோம். கோவை மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை 3 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதில் 750-க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம்.

நீலாம்பூரில் பணிமனை அமைக்கப்பட உள்ளதால் அவிநாசி வழித்தடத்தில் பணிகள் விரைவாக முடியும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்புதல்கள் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப் பெற்றதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிக்கப்படும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையை விட கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக முடிவடைய வாய்ப்புள்ளது.'' இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் அர்ஜுனன், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x