Published : 24 Dec 2024 01:17 PM
Last Updated : 24 Dec 2024 01:17 PM
சென்னை: அமித்ஷாவும் பிரதமர் மோடியும் வேறு அல்ல இருவரும் ஒரே குழல் ஊதும் நபர்கள்தான் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கக் கோரியும் உடனடியாக அவரை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியாளர்களைச் சந்தித்து குடியரசு தலைவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியாளர்களை சந்தித்து மனு அளிக்கும் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் சென்னை துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் மாநிலத் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் செல்வம் மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் சென்னை மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன் எம்.எஸ்.திரவியம் முத்தழகன் டில்லி பாபு அடையாறு துரை ஆகியோர் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் அமித்ஷா அவர்களை பதவியில் இருந்து நீக்க கோரி குடியரசு தலைவருக்கு பரிசீலனை செய்ய கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு கூறியதாவது: மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளித்திருக்கின்றோம் .
அம்பேத்கரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அம்பேத்கர் பற்றி தவறாக குறை கூறியதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தியுள்ளோம் எல்லா மாவட்ட தலை நகரங்களிலும் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
பிரதமர் மோடி உண்மையாக அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் சட்டத்தின் படி ஆட்சி நடப்பதாக இருந்தால் உடனடியாக அமித்ஷாவை கைது செய்ய வேண்டும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். குடியரசுத் தலைவர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று கோரிக்கை மனு அளித்துள்ளது. எங்களது கோரிக்கையை நிறைவேற்ற இன்னும் பல போராட்டங்களை நடத்துவோம் .
அமித்ஷாவும் பிரதமர் மோடியும் வேறு அல்ல இருவரும் ஒரே குழல் ஊதும் நபர்கள்தான் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தான். பிரதமர் மோடி அமித்ஷா ஆகிய இருவரையுமே நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என எங்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களோடு இணைந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் போராடி வருகின்றனர். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...