Published : 24 Dec 2024 12:19 PM
Last Updated : 24 Dec 2024 12:19 PM

“திராவிட மாடல் குறித்து கேலி பேசுவோருக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்”  - முதல்வர் ஸ்டாலின் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெரியாரின் கைத்தடி நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

சென்னை: “திராவிட மாடல் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்போருக்கு தந்தை பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். பெரியாரை உலகமயமாக்கி, உலகத்தின் பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, முதல்வருக்கு தந்தை பெரியாரின் கைத்தடி நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “என்ன பேசுவதென்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர் வீரமணி அளித்துள்ள அந்தப் பரிசை வாங்குகிற போது, என்னையே நான் மறந்திருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நான் பெற்றிருக்கலாம், எனக்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. போதும், எனக்கு இது போதும். திராவிட மாடல் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்போருக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும்.

நான் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டுக்கு வருகிற போதெல்லாம் நான் உணர்ச்சி, எழுச்சியைப் பெறுவதுண்டு. அதைப்பெற்று நான் இன்றைக்கு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமைப் பெறவும், சுயமரியாதையைப் பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களைப் புரிந்து நம் இனதுக்காக அயராது உழைத்த பெரியாரின் நினைவுநாள் இன்று.

அவருடைய கருத்துகளை, எண்ணங்களை, போராட்டங்களை, தியாகங்களை, வாழ்க்கை வரலாற்றை நம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்கிற வகையில் டிஜிட்டல் நூலகமாக ஆய்வு மையம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம் என்று மறைந்த முதல்வர் கருணாநிதி கூறினார். பெரியாரின் தொண்டர்களாகிய நாம் அந்த பயணத்தை தொடங்கி, இந்த முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறோம்.

அவர் வாழ்ந்த காலத்தில், அவர் பேசிய முற்போக்கு கருத்துகளுக்காக, மானுட சமுதாயத்தின் விடுதலைக்கான கருத்துகளுக்காக பழமைவாதிகள் மற்றும் பிற்போக்குவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார். ஊருக்குள் வருவதற்கு தடை, பேசுவதற்கு தடை, கோயிலுக்குள் நுழையத் தடை, எழுதுவதற்கு தடை, பத்திரிகை நடத்த தடை, போராட்டம் நடத்த தடை, அத்தனை தடைகளையும் உடைத்து அவர் நம்மை வீதிகளில் மட்டும் நுழைய விடவில்லை. இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேரின் மனதிலும் அவர் நுழைந்திருக்கிறார்.

அதனால்தான், தந்தை பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதுதான் அவருடைய தனித்தன்மை. பெரியாரின் கருத்துகளை இன்றுவரை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து, என்றென்றும் வாழ்கிறார் பெரியார் என்ற நிலையை உருவாக்கியவர் ஆசிரியர் கி.வீரமணி. பெரியாரை உலகமயமாக்கி, உலகத்தின் பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம்” என்று முதல்வர் பேசினார்.

முன்னதாக, அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி செலுத்தினார். அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளாட்சி பிரதிநிகள், கட்சியினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x