Published : 24 Dec 2024 11:10 AM
Last Updated : 24 Dec 2024 11:10 AM

மத்திய அரசு பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்

சென்னை: கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.

மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். 5 அல்லது 8-ஆம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள். அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 5 மற்றும் 8&ஆம் வகுப்புகளுக்கு 2020&ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதைக் கண்டித்து அந்த ஆண்டுட ஜனவரி 28&ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமகவுடன் பேச்சு நடத்திய அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க>> பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x