Published : 24 Dec 2024 10:35 AM
Last Updated : 24 Dec 2024 10:35 AM

விதிமீறி கட்டிடங்களை கட்டிய யாருக்கும் இரக்கம் காட்ட முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள்

சென்னை: விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என எதற்கும் எந்த இரக்கமும் காட்ட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் வில்லிவாக்கம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு. சட்டவிரோதமாக 3 மாடிகளை கட்டியுள்ளதாக அப்பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர். அதையடுத்து அந்த நோட்டீஸை எதிர்த்தும், சட்ட விரோதமாக கட்டியுள்ள கூடுதல் கட்டிடத்தை இடிக்க தடை கோரியும் அப்பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்து 500 மாணவர்கள் படித்து வருவதால் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்ட விவகாரத்தில் அரசு கருணை காட்ட வேண்டும். சென்னை தி.நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் விதிமீறி பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டியுள்ளன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது ஒருதலைபட்சமானது, என வாதிடப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், “தி.நகரில் உள்ள விதிமீறல் வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது. சட்ட விரோதமாக விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள் மட்டுமல்ல, தேவாலயங்கள், மசூதிகள். கோயில்கள், மருத்துவமனைகள் என எதற்கும் எந்த இரக்கமும் காட்ட முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதே நேரம் ஆயிரத்து 500 மாணவர்கள் இந்த பள்ளியில் படிப்பதாக கூறியிருப்பதால் இந்த கல்வியாண்டு முடியும்வரை அதாவது வரும் 2025 ஏப்ரல் வரை மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளிக்கு எதிராக சென்னை மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. எங்களால் இந்த அளவுக்கு மட்டும்தான் இரக்கம்காட்ட முடியும், என உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x