Published : 24 Dec 2024 10:20 AM
Last Updated : 24 Dec 2024 10:20 AM

‘அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்’ - இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: “நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்.” என்ற இயேசுவின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பின் திருஉருவமாம், கருணையின் வடிவமாம் தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை, உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

“உன் மீது நீ அன்பு செலுத்துவது போல், அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்” என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி வீட்டினை அழுகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

“நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்.” என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x