Published : 24 Dec 2024 09:58 AM
Last Updated : 24 Dec 2024 09:58 AM
சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில், சென்னை பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில், கிறிஸ்துமஸ் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களில் நாம் எந்த அரசியல் பேக்கிறோம் என்று நமக்கு புரியாவிட்டாலும், மக்களுக்கு புரியும். சிறுபான்மை மக்களுக்கு துரோகங்கள் செய்துளிட்டு வாக்கு அரசியலுக்காக, சிறுபான்மையினருக்கு நண்பர்களாக நடிக்கிறவர்கள் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கின்றனர். சிறுபான்மையினர் மீது உண்மையான அக்கறை கொண்ட இயக்கம் திமுகதான்.
மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை தூண்டி பிடிவாத அரசியல் செய்பவர்களுக்குதான் நாங்கள் எதிரி. மற்றபடி வழிபாடும், இறையியலும் அவர்கள் விருப்பம், உரிமை.
திட்டங்களை வழங்குவதுடன் அனைத்து மக்களுக்கான பாதுகாப்பு அரணாக திமுக அரசு விளங்குகிறது. சிறுபான்மையினர் நலன், உரிமைகளை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசு, சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அரசை நடத்தி வருகிறது. சிறுபான்மையினரை கொடுமையில் இருந்து காக்கும் காவல் அரணாக திமுக தொடர்ந்து செயல்படும். பாஜகவினர் மதச்சார்பின்மை என்ற சொல்லையே அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த சொல்லை நீக்க முடியாவிட்டால், அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லிணக்க இந்தியாவில் பிளவு சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர்கள் திருந்தவில்லை. அது தான் வருத்தம். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் ஒற்றுமை இந்தியாவை சிதைத்து ஒற்றை இந்தியாவாக்க பார்க்கின்றனர். ஆனால், நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரும் இதற்கு எதிராக நிச்சயமாக இருப்பார்கள். நாடு நல்லவர்கள் கையில் பாதுகாப்பாக இருக்கும். அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் நாள் நிச்சயம் விடியும். சிறுபான்மை மக்களுக்கு திமுக எந்தவித சமரசமுமின்றி போராடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT