Published : 24 Dec 2024 02:52 AM
Last Updated : 24 Dec 2024 02:52 AM
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சித் துறைசார்பில் ரூ.99.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 171 பள்ளிகளில் ரூ.56.11 கோடியில் 350 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் திட்டத்தின்கீழ் தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.8.33 கோடியில் 50 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு 21 மாவட்டங்களில் உள்ள 195 பள்ளிகளில் ரூ.64.44 கோடி செலவில் 400 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அலுவலக கட்டிடங்கள் திறப்பு: ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் மூலம் கோயம்புத்தூர் - மதுக்கரை, புதுக்கோட்டை- திருமயம், விருதுநகர் – ராஜபாளையம், ராணிப்பேட்டை – திமிரி, தென்காசி – குருவிகுளம், திருவாரூர் - கோட்டூர், நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ.35.24 கோடியில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுதவிர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அல்லது திட்ட இயக்குநர்கள், செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டுக்காக ரூ.8.46 கோடி மதிப்பில் 95 வாகனங்களை வழங்கும் வகையில், வாகனங்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
டெல்லியில் தேசிய விருது: மேலும், தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான உட்கட்டமைப்புகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கோயம்புத்தூர் மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கீரநத்தம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசுக்கான விருதும், மகளிருடன் நல்லிணக்கம் கொண்ட ஊராட்சியாக தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் வரகனூர் ஊராட்சியும் தேர்வு செய்யப்பட்டு 3-ம் பரிசுக்கான விருதும் குடியரசுத் தலைவரால் கடந்த டிச.11-ம் தேதி டெல்லியில் வழங்கப்பட்டது.
விருது பெற்ற கீரநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரா.பழனிசாமி மற்றும் வரகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ம.சுப்புலட்சுமி ஆகியோர் முதல்வரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் இ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பா.பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT