Published : 24 Dec 2024 12:54 AM
Last Updated : 24 Dec 2024 12:54 AM
பொங்கல் விடுமுறையில் நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (என்டிஏ) யுஜிசி நெட் தகுதித்தேர்வை ஜனவரி 3 முதல் 16 வரை நடத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் விழா பொங்கல் திருநாள் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகையும், 14 ஆம் தேதி பொங்கல் (தமிழ்ப் புத்தாண்டு) பண்டிகையும், ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினமாகவும் (மாட்டுப் பொங்கல்) ஜனவரி 16 ஆம் தேதி உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு நாட்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கெனவே ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழக விவசாயிகளின் உணர்வார்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்ல, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும். பொங்கல் திருநாளை போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பொங்கல் விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும். ஏற்கெனவே, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி மாத பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT