Published : 24 Dec 2024 12:21 AM
Last Updated : 24 Dec 2024 12:21 AM

"பிறவியிலே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ சிகிச்சையால் நன்றாக பேசலாம்"

காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை செய்துகொண்டு செவிப் புலன் வாய்மொழி சிகிச்சைக்கு தவறாமல் வந்த குழந்தைக்கு ‘டீன்’ அருள் சுந்தரேஷ் குமார், பரிசு வழங்கினார்.

பிறவியிலே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ சிகிச்சையால் நன்றாக பேசலாம் என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அருள் சுந்தரேஷ்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு தொண்டை சிகிச்சைப் பிரிவில் ‘செவி வழி கேட்போம் மற்றும் உரக்கப் பேசுவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள், குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி மருத்துவ நிபுணர்கள் எடுத்துக் கூறினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பேசுகையில், ‘‘இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத 227 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக காக்ளியர் இம்ப்ளான்ட் என்ற சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு தொடர் (Auditory Verbal Therapy) செவிப்புலன் வாய்மொழி சிகிச்சையின் மூலம் சிறப்பாக பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை செய்துகொண்ட காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள், ஒரு ஆண்டுக்கு செவிப்புலன் வாய்மொழி சிகிச்சை பெற்றுக் கொண்டால் சாதாரண குழந்தைகளைபோல் சிறப்பாக பேச முடியும். அதனால், பெற்றோர்கள் இந்த சிகிச்சைக்கு 6 வயது வரையுள்ள குழந்தைகளை அழைத்து வர வேண்டும்’’ என்றார்.

காக்ளியர் இம்ளான்ட் குழந்தைகளின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், காக்ளியர் இம்ப்ளான்ட் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் பேராசிரியர் அழகுவடிவேல் செய்திருந்தார். இணைப் பேராசிரியர்கள் தி.சிவசுப்பிரமணியம், மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x