Published : 23 Dec 2024 09:32 PM
Last Updated : 23 Dec 2024 09:32 PM
திருச்சி: “திமுக கூட்டணி கட்சிகள் வலிமையாக உள்ளன. வரும் தேர்தலில் 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து சரியானது. திமுக கூட்டணி தமிழகத்தில் பல இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
காட்டுமன்னார்கோவிலில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் விசிக தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக கூட்டணி கட்சிகள் வலிமையாக உள்ளன. வரும் தேர்தலில் 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து சரியானது. திமுக கூட்டணி தமிழகத்தில் பல இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். வேல்முருகன் திமுக கூட்டணியில் நீடிப்பார் என நம்புகிறேன். நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
பாஜக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் அது வெற்றி பெறாது என்பதை தமிழக மக்கள் ஏற்கெனவே உணர்த்தி உள்ளார்கள். ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் பத்திரப் பதிவு விலை உயர்வு இருக்க வேண்டும். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். திமுக கூட்டணி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. அதனால் அவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள். அது மகிழ்ச்சியான விஷயம்தான்.
கடந்த பொது தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற சிறுபான்மை வாக்குகள் பெரும் அளவில் உதவியது. அதன் காரணமாகவே சீமான் அவ்வாறு பேசியுள்ளார். அவர் ஆதங்கத்தில் சொன்னால் கூட அவர் உண்மையை தான் கூறி உள்ளார். உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கைப்படி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டையும் படியுங்கள் மூன்றாவதாக இந்தியை படிக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் நிர்ப்பந்திக்கிறார். இதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளோம்.
அம்பேத்கர் குறித்து, தவறான கருத்துக்களை கூறவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அவர் அம்பேத்கரை கடவுளுடன் ஒப்பிட்டு பேசியது என்பது அம்பேத்கரை குறைவாக மதிப்பிடுவதாக தான் அமைந்தது. அம்பேத்கருக்கு எதிராக சாவர்க்கர் பிரச்சாரம் செய்ததால் தான் அம்பேத்கர் தோல்வியடைந்தார். பாஜகவினர் உண்மையை திரித்து காங்கிரஸ்தான் அம்பேத்கர் தோல்விக்கு காரணம் பொய்யை பரப்புகிறார்கள். அம்பேத்கருக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள், அம்பேத்கரை இந்துத்துவாவாதியாக பரப்புகிறர்கள்.
அமித் ஷாவை கண்டித்து டிச.28-ம் தேதி அகில இந்திய அளவில் அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் விசிக சார்பில் போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டத்தில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயர் உச்சரிக்கப்படும். ஆளுங்கட்சி மீது குறிப்பிட்ட சதவீதம் அதிருப்தி நிலவத்தான் செய்யும். தமிழகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழக அரசு விரைந்து கட்டுப்படுத்த வேண்டும். திமுக மீது விசிகவுக்கு எந்த அதிருப்தியும் இல்லை” என்றார். அப்போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT