Last Updated : 23 Dec, 2024 07:36 PM

 

Published : 23 Dec 2024 07:36 PM
Last Updated : 23 Dec 2024 07:36 PM

நெல்லையில் கேரள கழிவுகளை அகற்றும் பணி 2-வது நாளாக நீடிப்பு

திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட கேரள கழிவுகளை அகற்றும் பணி 2-வது நாளாக நடந்தது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட கேரள கழிவுகளை அகற்றும் பணி 2-வது நாளாக இன்று (டிச.23) நீடித்தது. திருநெல்வேலி அருகே கோடகநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தமிழகம் மற்றும் கேரளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து கழிவுகளை அள்ளி லாரிகளில் எடுத்துச் செல்லும் பணிகள் நேற்று தொடங்கியது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் சாஷ்ஷி, சுகாதாரத் துறை அலுவலர் கோபகுமார் மற்றும் கேரள சுகாதாரத்துறை வருவாய்த்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் இந்த பணிகளை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் குழு அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையில் கொண்டாநகரம் செல்லும் காட்டுப்பாதையில் கழிவுகளை அள்ளி எடுத்துவந்த லாரி மண்ணில் சிக்குண்டது. இதனால் கொண்டா நகரம் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகள் தாமதமாகியது.

இந்நிலையில், இன்று 2-வது நாளாக கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கேரளாவிலிருந்து 5 டிப்பர் லாரிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் லாரிகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலந்தைகுளம் ,வேளார்குளம் கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு 18 லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. பழவூர், கொண்டாநகரம் ஆகிய பகுதிகளில் இருந்து கழிவுகளை அகற்றும்பணி 2-வது நாளாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, கேரள கழிவுகளை கொட்டியது தொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த மாயாண்டி, மனோகரன், சேலம் மாவட்டம் ஓமநல்லூரைச் சார்ந்த லாரி ஓட்டுநர் செல்லத்துரை, கேரள மாநில கழிவு மேலாண்மை அலுவலர் நிதின் ஜார்ஜ் மற்றும் கேரள கழிவுகளை ஏற்றும் ஏஜெண்டாக செயல்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த சடானா நந்தன் ஷாஜி ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x