Published : 25 Jul 2018 02:07 PM
Last Updated : 25 Jul 2018 02:07 PM
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 18-ம் தேதி தான் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும், ட்ரக்யோஸ்டமி கருவியில் பொருத்தப்பட்டுள்ள பழைய குழாயை மாற்றுவதற்காகவும் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார். அன்றைய நாளே மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்குத் திரும்பினார். மருத்துவமனைக்குச் சென்று வந்த நாளிலிருந்துதான் அவருடைய உடல்நலம் குறித்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
95 வயது ஆன கருணாநிதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ட்ரக்யோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. இதனிடையே அவ்வப்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
கடந்த ஓராண்டாக அறிவாலயம், முரசொலி அலுவலகம், டிடிகே இல்லம் என பல இடங்களுக்கு திடீரென சென்று ஆச்சர்யமூட்டுவார் கருணாநிதி. தன் பேரன், பேத்திகளுடன் விளையாடுவது, அவர்கள் பாடுவதை ரசிப்பது என அவரது வீடியோ காட்சிகள் வெளியிடப்படும்போது திமுக தொண்டர்கள் உற்சாகமடைவர்.
கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு சென்றார். அன்றைய தினம் வீட்டு வாசலருகே கருணாநிதி கூடியிருந்த திமுக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால், திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அதன்பிறகு, கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் திருவாரூரில் கொண்டாடப்பட்டது. அதில், உடல்நிலை காரணமாக கருணாநிதி கலந்துகொள்ளவில்லை.
சமீபத்தில், ‘தி இந்து’க்கு பேட்டியளித்த மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, “அவரால் பேச முடியவில்லை. சில நேரங்களில் நடப்பு நிகழ்வுகளை சொல்லும்போது முக பாவனைகள், ஓரிரு வார்த்தைகள் மூலம் எங்களுக்கு எதையேனும் உணர்த்துவார். அதனைப் புரிந்துகொள்ள முடியும்” என கூறியிருந்தார்.
இந்நிலையில்தான், சமீபத்தில் காவேரி மருத்துவமனைக்குச் சென்றுவந்த பிறகு அவரது உடல்நலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை கோபாலபுரத்தில் புதன்கிழமை பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “மருத்துவமனைக்கு சென்றுவந்த பிறகு ஓய்வில் இருக்கிறார். சிகிச்சைக்கு பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அவர் நலமுடன் இருக்கிறார்” என்று கூறினார்.
கருணாநிதி உடல்நலம் குறித்து நம்மிடம் பேசிய சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், “திமுக தலைவர் நன்றாக இருக்கிறார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு எப்படியிருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். நினைவு அவருக்கு வந்துவந்து திரும்புகிறது. இது ஏற்கெனவே உள்ள பிரச்சினைதான். ட்ரக்யோஸ்டமி கருவியின் குழாய் மாற்றப்பட்டிருப்பதால் முன்பைவிட சோர்வாக இருக்கிறார். 5-6 நாட்களாக வீட்டில் வெளியே வந்து அமரவில்லை. அறையில்தான் இருக்கிறார். யாரையும் பார்க்க அனுமதிக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உறவினர்கள் அனைவரும் அருகில் உள்ளனர். வதந்திகள் வருவது வழக்கம்தானே” என்றார் ஜெ.அன்பழகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT