Published : 23 Dec 2024 06:42 PM
Last Updated : 23 Dec 2024 06:42 PM
“கள் இறக்க அனுமதி கொடுங்கோ...” என தமிழக அரசை காலங்காலமாக கேட்டுக் கொண்டிருக்கும் ‘தமிழ்நாடு கள் இயக்கம்’ செ.நல்லசாமி விழுப்புரத்தில் ‘கள் விடுதலை மாநாடு’ நடத்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறார்
தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி கால் நூற்றாண்டுக்கும் மேலாக களத்தில் நின்று போராடிக் கொண்டிருப்பவர், தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி. கள் போதைப்பொருள் என நிரூபித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவதாக பத்து வருடங்களுக்கு முன்பு பரபரப்பைக் கூட்டினார். இவருக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும் காந்தியவாதியுமான குமரி அனந்தனும் புறப்பட்டார்.
கள் போதைப் பொருளா இல்லையா என்பதை நிரூபிக்க இவர்கள் இருவரும் 2011-ல் சென்னையில் ஆடிய ஆட்டம் முடிவு தெரியாமல் ‘டிரா’வில் முடிந்தது. இதற்குப் பிறகு பரிசுத் தொகை ரூ. 1 லட்சத்தை, 10 லட்சமாக உயர்த்திய நல்லசாமி, யாரும் விவாதத்துக்கு வரவில்லை என்றதும் பிற்பாடு அதை ரூ. 1 கோடியாக உயர்த்தினார். அப்படியும் யாரும் போட்டிக்கு வராததால் பரிசுத் தொகையை ரூ. 10 கோடியாக உயர்த்திவிட்டார். “தற்போது அந்த ரூ. 10 கோடி பரிசுத் தொகையானது நல்லசாமியிடமே ‘பத்திரமாக’ இருக்கிறது” என, அரசியல் விமர்சகர்கள் தமாஷ் பண்ணுமளவுக்கு இருக்கிறது விவகாரம்.
இந்நிலையில், இடைவெளி விட்டு தற்போது மீண்டும் புறப்பட்டிருக்கும் குமரி அனந்தன், கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் என்பதை நிரூபித்து வாதாட வருவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து உற்சாகமாகிவிட்ட நல்லசாமி, ஜனவரி 7-ம் தேதி ஈரோட்டில் இந்த விவாதத்தை நடத்திக் கொள்ளலாம் என அனந்தனுக்கு அப்டேட் அனுப்பி இருக்கிறார்.
இந்த கோதாவுக்கு மத்தியில், ஜனவரி 21-ம் தேதி விக்கிரவாண்டியில் கள் விடுதலை மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் நல்லசாமி. இந்த மாநாட்டில், கள் விடுதலைக்கு ஆதரவாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
“கள்ளுக்கான தடை என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடாது” என உச்ச நீதிமன்றமே தீர்ப்பெழுதி விட்டது. அதன் பிறகும், தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்கச் சொல்லும் நல்லசாமி, “புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா என தென் மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. அங்கெல்லாம் கள் கலப்படத்தை கட்டுப்படுத்தும் போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் முடியாதா?
தமிழ்நாட்டில் அரசாங்கமே டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து மக்களுக்கு மதுவை விற்கிறது. கள்ளச்சாராய சாவுகள் ஏற்படும் போது மட்டும் மதுவுக்கு மாற்றாக கள்ளை நிறுத்துகின்றனர். கள் மது அல்ல; மதுவுக்கு மாற்றும் அல்ல. சத்தான, இயற்கை மென்பானமே. விக்கிரவாண்டியில் நடைபெறும் கள் விடுதலை மாநாடு இந்த விஷயத்தில் நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும்; அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்” என தனித்து நின்று முழங்குகிறார்.
விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்னதாகவே ஈரோட்டில் குமரி அனந்தனுடனான ‘கள் போதை’ கலகல விவாதம் இருப்பதால் பரிசுத் தொகை ரூ.10 கோடியை ‘பத்திரப்படுத்த’ இப்போதே சுறுசுறுப்பாக சுற்றிச் சுழல ஆரம்பித்துவிட்டார் நல்லசாமி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT