Published : 23 Dec 2024 04:14 PM
Last Updated : 23 Dec 2024 04:14 PM

சென்னையில் 75 கி.மீ. கால்வாய்களில் ரூ.100 கோடியில் சுவர், வலைகள் அமைக்க நடவடிக்கை

கொடுங்கையூர் கால்வாயில் முத்தமிழ்நகர் பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் (கோப்பு படம்)

வடகிழக்கு பருவமழைக் காலம் வந்தாலே, சென்னை மாநகர மக்களுக்கு வெள்ள பாதிப்பு அச்சம் வந்துவிடுகிறது. 2015-ல் புறநகர் பகுதிகளில் பெய்த மழை சென்னைக்குள் வந்ததால் வெள்ளம் ஏற்பட்டது, 2023-ல் மிக்ஜாம் புயல் சென்னை அருகே நகராமல் நின்றுவிட்டதால் வெள்ளம் ஏற்பட்டது என ஒவ்வொரு முறையும் புதுப்புது காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அப்போது மக்களும் உடைமைகள் இழப்பு, உணவு, குடிநீர் இன்றி தவிப்பு போன்ற பிரச்சினைகளை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடியில், மாநகரில் வெள்ள பாதிப்பை குறைக்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் 2 ஆயிரத்து 624 கிமீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலமாகவே வடிகின்றன. இந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் ஓட்டேரி நல்லா கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் உள்ளிட்ட 33 கால்வாய்களில் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 33 கால்வாய்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவற்றில் மழைநீர் இயல்பாக வழிந்தோடினாலே மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

மழை காலங்களில் கால்வாய்களில் அதிக நீர் செல்லும்போது, கால்வாய்களின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலங்களில் பொதுமக்கள் வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகள், வீட்டு தலையணைகள், பாய்கள், காலணிகள், பாலியஸ்டர் துணிகள் போன்றவை அடைத்து, வெள்ளநீர் செல்வதை தடுக்கிறது. இதன் காரணமாக கால்வாய் கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் புகுந்து வெள்ள பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. பொதுமக்களிடம், தினமும் வீடு வீடாக வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் மட்டுமே, மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வீசி எறியக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலனில்லை.

கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை அடைத்துக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர் (கோப்பு படம்)

அதனால் மாநகரப் பகுதியில் பாயும் 75 கிமீ நீள கால்வாய்களின் இருபுறங்களிலும் வலுவான சுவர்களை உயரமாக எழுப்பி, வெள்ளநீர் கரைகளில் பாய்வதை தடுக்க இருக்கிறோம். பொதுமக்கள் வீசி எறியும்குப்பைகளால் கால்வாய் அடைத்துக்கொள்வதை தடுக்க, கால்வாய்கள் முழுவதும் வலைகளை கொண்டு மூடப்படும். அவற்றின் மீது குப்பைகளை வீசி எறிந்தால், அவை தனியாக சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாநகர பகுதியில் வெள்ள பாதிப்பு குறையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x