Published : 23 Dec 2024 03:07 PM
Last Updated : 23 Dec 2024 03:07 PM

‘திமுக Vs பாஜக’ ஆக மாறிவிட்டது அரசியல் களம்: தமிழக பாஜக சொல்லும் ‘லாஜிக்’

சென்னை: “வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக நடத்தப்பட்ட திமுக செயற்குழு, பாஜகவுக்கு எதிரான செயற்குழுவாக நடந்து முடிந்திருக்கிறது. இதன் மூலம் வரும் 2026 தேர்தலில், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்பதை திமுக மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களம், ‘திமுக Vs பாஜக ’ என்று மாறிவிட்டதை பிரதிபலிக்கும் விதமாகவே திமுக செயற்குழுவில் பேசியவர்களின் பேச்சுக்கள் அமைந்திருந்தன” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக செயற்குழு கூட்டம் நேற்று (டிச.22) நடந்து முடிந்துள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் திமுக நடத்தும் சடங்குதான் இது. ஒவ்வொரு செயற்குழுவைப் போல, இந்த செயற்குழுவும், முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை புகழ் பாடும் கூட்டமாகவே நடந்து முடிந்திருக்கிறது. கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம்” என்றும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “200 இடங்களுக்கு மேல் வெல்வோம்” என்றும் கூறியிருக்கின்றார். இவர்கள் திமுகவின் 75 ஆண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்.

திமுக என்ற கட்சி கருணாநிதியின் குடும்ப பிடிக்குள் வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்றதில்லை. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருக்கும்போதும், எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்காத போதும் மட்டுமே திமுக தேர்தலில் வென்றிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும், நிலையற்ற தன்மையினாலும் மட்டுமே திமுக கூட்டணி தேர்தலில் வென்று வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த நிலை கண்டிப்பாக இருக்காது. திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமையப்போவது உறுதி. எனவே “ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம், 200 இடங்களுக்கு மேல் வெல்வோம்” என்று தந்தையும், மகனும் பகல் கனவு காண வேண்டாம்.

கடந்த மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்கள் வாங்கும் சான்றிதழ்கள் முதல், அரசு அலுவலகங்களை அணுகும் யாரும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. எங்கும் எதிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அனைத்து மட்டங்களிலும் திமுகவினர் அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வேலூரில் ஊழலை தட்டிக் கேட்ட பாஜக நிர்வாகியை, திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்திருக்கிறார்.

திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலிலேயே பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். இந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பொதுமக்கள் மீது சுமைகளை திமுக அரசு ஏற்றிக் கொண்டே இருக்கிறது. எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை. கடந்த 2006 -2011 திமுக ஆட்சியின் போது இப்படித்தான், அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று திமுகவினர் வீர வசனம் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை. அந்த நிலைதான் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஏற்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

திமுக செயற்குழுவில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம், மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு கண்டனம், விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு என மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக நடத்தப்பட்ட செயற்குழு, பாஜகவுக்கு எதிரான செயற்குழுவாக நடந்து முடிந்திருக்கிறது. இதன் மூலம் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்பதை திமுக மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களம், ‘திமுக எதிர் பாஜக ’ என்று மாறிவிட்டதை பிரதிபலிக்கும் விதமாகவே திமுக செயற்குழுவில் பேசியவர்களின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

இன்றளவும் மீனவர் பிரச்னை நீடிப்பதற்கு, மத்தியில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தபோது கச்சத் தீவு இலங்கைக்கு தாரை பார்க்கப்பட்டதே காரணம். கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திமுகவை தமிழக மக்களும், மீனவர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 1996 முதல் 2004 வரை தொடர்ந்து மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, கச்சத் தீவை மீட்க ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை. ஆனால் இப்போது, “கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது எதிர்த்தோம்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியிருக்கிறார். திமுகவின் இந்த நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை.

தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க திமுக முயற்சித்து வருவதையே திமுக செயற்குழு தீர்மானங்கள் காட்டுகின்றன. பாஜகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் விதைத்து விட்டால் வென்று விடலாம் என்று திமுக கனவு காண்கிறது. இனி அது நடக்கப் போவதில்லை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும். 2011 தேர்தலைப் போல திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்படும் . அந்த அளவுக்கு தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பலை வீசுகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x