Published : 23 Dec 2024 02:53 PM
Last Updated : 23 Dec 2024 02:53 PM
சென்னை: 2026 தேர்தலில் 25 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியிருந்த நிலையில், அது குறித்து திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
“2026-ல் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என திருமாவளவன் கூறியுள்ளார். என்னைப் போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்.” என்று ‘இந்து தமிழ் திசை’-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்திருந்தார்.
இது குறித்து திமுக மூத்த தலைவரும், தமிழக அமைச்சருமான எம்.ஆர்.கேபன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளன. இப்போதே தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேசத் தேவையில்லை. கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் அப்போது பேசிக்கலாம். மேலும், அதிமுக போல் திமுக கூட்டணிக் கட்சிகளை வெளியேற்றும் இயக்கம் இல்லை.
கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கும் கட்சி திமுக. முதல்வர் கூட்டணிக் கட்சிகளை மதிப்பவர். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன. முதல்வர் தொடர்ச்சியாக கூட்டணியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கூட்டணிக் கட்சிகளை முதல்வர் மதிக்கும் பண்பே காரணம்” என்றார்.
திருமாவளவன் சொன்னது என்ன? - இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “25 தொகுதிகள் வேண்டும் என்பது வன்னி அரசின் தனிப்பட்ட கருத்து. தவிர அது விசிக நிர்வாகிகளின் விருப்பமும் கூட. அவர்களின் விருப்பம் இயல்பானதே. விசிக என்றைக்குமே இத்தகைய நிபந்தனைகளை முன்கூட்டியே வைத்ததில்லை” என்றார். தொடர்ந்து, “திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேட்க, “வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்றே முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்” என்று திருமாவளவன் கூறினர்.
வன்னி அரசு கூறியது என்ன? - கேள்வி: அங்கீகரிக்கப்பட்ட கட்சி, 2 எம்பி-க்கள், 4 எம்எல்ஏ-க்கள் என அரசியலின் உச்சத்தில் இருக்கிறது விசிக. 2026-லும் திமுக கூட்டணிதானா?
பதில்: விசிக-வின் இந்தப் பயணம் சாதாரணமானது அல்ல. குருதியாற்றை கடந்து பயணித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகியிருக்கிறோம். இப்போது தமிழகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு விசிக-வை கூட்டணியில் சேர்த்தால், தலித் அல்லாதவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எண்ணவோட்டம் இருந்தது.
அதனை மாற்றி இப்போது விசிக இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்ற சூழலை உருவாக்கியுள்ளோம். 2026-ல் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என திருமாவளவன் கூறியுள்ளார். என்னைப்போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம். | பேட்டியை முழுமையாக வாசிக்க > “விசிக-வுக்கு 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும்!” - துணை பொதுச் செயலர் வன்னி அரசு விறுவிறு பேட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT