Published : 23 Dec 2024 01:13 PM
Last Updated : 23 Dec 2024 01:13 PM

“நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை டிச.29-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்” - பழ.நெடுமாறன் தகவல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், இந்த விழாவின் மின் அழைப்பிதழை திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார். பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாட்டில் கடந்த தலைமுறையில் மாபெரும் தலைவர்கள் பலர் நம்மிடையே வாழ்ந்திருந்தாலும், அவர்கள் வாழும் காலத்திலேயே எவருக்கும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதில்லை.

பொது வாழ்வில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக இந்த தலைமுறையைச் சேர்ந்தவராக திகழ்பவர் நல்லகண்ணு. அவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் நமக்குள்ள பெருமையாகும். மிக இளம் வயதிலேயே தன்னை மக்கள் தொண்டுக்கு ஒப்படைத்துக் கொண்டு போராட்ட வாழ்வை விரும்பி தேர்ந்தெடுத்து கட்சியைக் கடந்து அனைவராலும் மதித்து போற்றப்படும் பெருமைக்குரிய தலைவர் நல்லகண்ணு.

தமிழக அரசியலில் ஒப்பற்ற தலைவரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 29-ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நல்லகண்ணுவுக்கு சிறப்பு செய்தும், கவிதை நூலை வெளியிட்டும் விழாவைத் தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்றுகிறார். அதையடுத்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் நல்லகண்ணுவை பாராட்டிப் பேசுகின்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை சார்பில் த.மணிவண்ணன் செய்துள்ளார்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x