Published : 23 Dec 2024 06:10 AM
Last Updated : 23 Dec 2024 06:10 AM
சென்னை: தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட ரசாயன கசிவு காரணமாக, ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென பூமிக்குள் புதைந்தது. சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல இடங்களில் தரைக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டு வரப்படுகிறது.
தியாகராய நகர் பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால், பள்ளம் தோண்டும்போது, இக்கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் மிகவும் கவனத்துடன் சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில், தரைக்கு அடியில் கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, ரசாயன திரவம் பயன்படுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் ரசாயன கசிவு ஏற்பட்டது. எந்த இடத்தில் கசிவு ஏற்பட்டது என்று கண்டறியும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள லாலா தோட்டம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென பூமியில் புதைந்தது. இதனால், வீட்டுக்குள் பள்ளம் ஏற்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது, அந்த வீட்டில் ரசாயன கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சென்ற மெட்ரோ ரயில் ஊழியர்கள் அங்கு கசிந்திருந்த ரசாயனத்தை அப்புறப்படுத்தி, கான்கிரீட் கலவையை கொண்டு பூசி, வீட்டின் தரைப்பகுதியை சரிசெய்தனர். ரசாயனத்தின் அழுத்தம் காரணமாக, வீட்டின் தரைப்பகுதி பூமிக்குள் புதைந்தது தெரியவந்தது. சேதம் அடைந்த வீட்டை முழுமையாக சீரமைத்து தருவதாகவும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT