Published : 23 Dec 2024 06:15 AM
Last Updated : 23 Dec 2024 06:15 AM
சென்னை: சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவு திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார்.
உணவு திருவிழாவை ஆர்வத்துடன் காணவும், ஆசையுடன் உணவு உண்டு மகிழவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கரூர் நாட்டுக்கோழி பிரியாணி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, மதுரை கறி தோசை, நாமக்கல் முடவாட்டு கிழங்கு சூப், கன்னியாகுமரி பழம்பொறி, குதிரை வாலி புலாவ், சிந்தாமணி சிக்கன், பருப்பு போளி, தேங்காய் போளி, களி கருவாட்டு குழம்பு, ராகி இட்லி, நெய் சாதம் - மட்டன் கிரேவி போன்ற உணவுகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் உணவு திருவிழாவில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக மெரினாவுக்கு வருகை தந்தனர்.
கவுன்ட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் முதல் உழைப்பாளர் சிலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.50 லட்சத்துக்கு உணவு வகைகள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு திருவிழாவுக்கு வந்த வியாசர்பாடி காமாட்சி கூறும்போது, ‘‘அனைத்து மாவட்டங்களின் உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் குழந்தைகள் இதுவரை சாப்பிடாத உணவுகள் கிடைப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், கூட்டம் அதிகமாக இருப்பதால் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. கவுன்ட்டர்களை அதிகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
நாளை நிறைவு... ‘‘வீட்டில் சாப்பிடும் உணவுகளைவிட வித்தியாசமான உணவுகள் கிடைத்தன. சுவையும் அருமையாக இருந்தது. செம்பருத்தி ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என வியாசர்பாடி தன்ஸ்ரீ கூறினார். “உணவுகள் நன்றாக இருந்தாலும், ஏற்பாடுகள் போதவில்லை. கவுன்ட்டர்களில் நின்று வாங்கிச் செல்லும் உணவுகளை உட்கார்ந்து சாப்பிட இருக்கைகள் இல்லை.
முதியவர்கள், குழந்தைகளால் அதிகநேரம் நின்றுகொண்டு சாப்பிட முடியவில்லை” என்று வேளச்சேரி நாகராஜன் தெரிவித்தார். பார்வையாளர்கள் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை பங்கேற்கலாம். அனுமதி இலவசம். மெரினா உணவு திருவிழா நாளை (டிசம்பர் 24) நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT