Published : 22 Dec 2024 04:21 PM
Last Updated : 22 Dec 2024 04:21 PM
சென்னை: கடற்கொள்ளையர்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்ள ஆறுகாட்டுதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (20.12.2024) கோடியக்கரைக்கு தென்கிழக்கு திசையில் கடலுக்கு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்தப் பகுதிக்கு வந்த கடற் கொள்ளையர்கள் ஆறு பேர், மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று தமிழக மீனவர்களை தாக்கி, அவர்களது படகுகளை சேதப்படுத்தி ஜிபிஎஸ் கருவி உட்பட மீன்பிடி கருவிகளையும் மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதே போல், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கா.ராஜ்குமார், கா.ராஜேந்திரன், சென்னையைச் சேர்ந்த எம்.நாகலிங்கம் ஆகியோர் கோடியக்கரையின் தென் கிழக்கு திசையில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த ஆறு கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களது படகையும், மீன் பிடி கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதே போல பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரித்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த 16 ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக புது டெல்லி வந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது, மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகியது. தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கை அதிபர் திசநாயகவுக்கு எக்ஸ் தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தடுக்கப்படாமல் நீடிப்பது மீனவர்கள் வாழ்வாதாரத்தை அடியோடு நிராகரிக்கும் செயலாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசும், பிரதமரும் அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதுடன், அவர்கள் கடலில் அமைதியான சூழலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT