Published : 22 Dec 2024 04:01 PM
Last Updated : 22 Dec 2024 04:01 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் செயல்படும் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இயற்கை மருத்துவச் சிகிச்சைகளான நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், யோகாகிரியா சிகிச்சைகள், மண் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும், யோகா பயிற்சிகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன.
மேலும், 100 மாணவர்கள் பயிலக்கூடிய ஐந்தரை ஆண்டு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு (BNYS) மற்றும் 30 மாணவர்கள் பயிலக்கூடிய 3 ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புகளும் (MD) இங்கு பயிற்று விக்கப்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர். உணவு வசதியும் உள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக பூச்சி, புழு, முடி, பிளாஸ்டிக் பேப்பர், நூல், துணி போன்றவை உணவில் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து மாணவர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே இந்த உணவுகளை உண்ட பல மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தனியார் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதனை யாரும் வெளியே செல்லக்கூடாது என மாணவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்கள் சிலர் கூறியது: அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களும் தரமற்றவையாக உள்ளன. மெனுவில் இல்லாத தரமற்ற உணவினை வழங்குகின்றனர். உணவு கட்டணம் மாதம் மாதம் வசூலிக்கின்றனர். ஆனால், அவர்கள் கூறியபடி உணவு வகைகள் வழங்கப்படுவதில்லை. சுத்த சைவ உணவு அசுத்தமாக உள்ளது. உணவில் பூச்சி, புழு, முடி, பிளாஸ்டிக் பேப்பர், நூல், துணி வருகிறது. இதனை உண்ட மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன.
இது குறித்து புகார் தெரிவித்த நிலையில், விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுங்கள். உங்களது படிப்பு முடிந்தவுடன் நான் தான் உங்கள் அனைவருக்கும் கையெழுத்து வழங்க வேண்டும். அதனால், கொடுக்கும் உணவைச் சாப்பிடுங்கள் என்று மிரட்டுகின்றனர். ஆனால், இந்த உணவை சாப்பிடுவதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பல மாணவர்கள் சிகிச்சை பெற்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT