Published : 22 Dec 2024 08:20 AM
Last Updated : 22 Dec 2024 08:20 AM
சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய பட்ஜெட் முன்னோட்ட கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான முன்னோட்டக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்காகத் தமிழக அரசு ரூ.26,490 கோடி செலவிட்டுள்ளதால், மாநிலத்தில் இதர வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஆசிரியர்களுக்கான ஊதியம் - கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பள்ளிச் செயல்பாடுகளை முடக்கும் வகையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் நிபந்தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் மத்திய அரசு, 44 லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்கள், 21,276 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசின் 2025-ம் ஆண்டு பட்ஜெட்டில், தமிழகத்தில் புதிய ரயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
வானிலை நிகழ்வுகளின் தீவிரத்தன்மை காரணமாக தமிழகம் தொடர் பேரிடர் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் உயிர், வாழ்வாதாரம், உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை.
குறிப்பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6,675 கோடியை விடுவிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தினேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் மரபணு சிகிச்சைக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய தமிழகம் ஆதரவு: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித் துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், வணிக வரி ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், புற்றுநோயாளிகளின் மருத்துவ செலவை குறைக்கும் வகையில், மரபணு சிகிச்சை மீதான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்தார். இணக்க முறையில் வரி செலுத்தும் வணிகர்கள், வணிக இடங்களின் வாடகை மீது எதிரிடை கட்டண முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவும் அவர் ஆதரவு தெரிவித்தார்.
மேலாண்மை தகவல் தரவு அறிக்கைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்வதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT