Published : 22 Dec 2024 08:02 AM
Last Updated : 22 Dec 2024 08:02 AM
வேலூர்: இந்தியர்களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர்ச் சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியம் சார்ந்த குறைகளைத் தீர்க்கவும் வேலூர் விஐடி அண்ணா அரங்கில் நேற்று ‘ஸ்பர்ஸ்’ விளக்கம் மற்றும் குறைதீர் முகாம் நடைபெற்றது. சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சிறப்பு பாதுகாப்பு கணக்குகள் துறைத் தலைவர் மயாங்க் ஷர்மா, தென்பிராந்திய ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் கரண்பீர்சிங் பிரார், இந்திய கடலோர காவல் படை டிஐஜி தினகரன் முன்னிலை வகித்தனர். சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் வரவேற்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தேசப் பாதுகாப்பில் வேலூர் முக்கிய இடம் வகிக்கிறது. இங்குள்ள ராணுவப்பேட்டை என்ற கிராமத்தில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். 1857-ல் தான் முதல் சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகின்றனர். ஆனால், அதற்கு 51 ஆண்டுகளுக்கு முன்பே 1806 ஜூலை 10-ம் தேதி வேலூரில் ஆங்கிலேயர் படையில் இருந்த 1,000-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் நடத்திய புரட்சியில், 200-க்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் பலத்த காயமடைந்தனர். இதை ஆங்கிலேயர்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் இதை கலகம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அது கலகம் இல்லை புரட்சி. இதுதான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம். வேலூர் இந்தியர்களுக்கு வீரம்மிக்க, புண்ணிய நிலமாகும். முன்னாள் படைவீரர்கள் இந்த நாட்டின் சொத்து. அவர்களால் தேசம் பெருமை கொள்கிறது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
முகாமில், 2000-க்கும் மேற்பட்ட முப்படை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். ரூ.1 கோடி மதிப்பிலான ஓய்வூதிய நிலுவைத் தொகை காசோலைகளை ஆளுநர் வழங்கியதுடன், வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினரை கவுரவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT