Published : 22 Dec 2024 07:49 AM
Last Updated : 22 Dec 2024 07:49 AM
சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதத்தால் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக கடந்த 2024-25-ம் நிதியாண்டில் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்துக்கு ரூ.33,467 கோடி மதிப்பிலான 22 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், 10 புதிய வழிதடம், 3 அகல ரயில் பாதை மாற்றம், 9 இரட்டை ரயில் பாதை திட்டப் பணிகள் அடங்கும். இதில், 872 கி.மீ நீளமுள்ள புதிய வழித்தடம் அமைக்கும் பணியில் 24 கி.மீ.க்கான பணிகளும், 748 கி.மீ. நீளமுள்ள அகல ரயில் பாதையாக மாற்றும் பணியில் 604 கி.மீ.க்கான பணிகளும், 967 கி.மீ இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியில் 37 கி.மீ.க்கான பணிகளும் என மொத்தம் ரூ.7,154 கோடி மதிப்பீட்டில் 665 கி.மீ.க்கான பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது பல மடங்கு அதிகரித்தபோதும், தேவையான நிலத்தை கையகப்படுத்த, மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுக்காததால்தான் பல ரயில்வே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 3,389 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் பட்சத்தில், வெறும் 866 ஹெக்டேர் நிலம் (26 சதவீதம்) மட்டுமே இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே 71 கி.மீ.க்கு, புதிய பாதை அமைக்க 273 ஹெக்டேர் நிலம் தேவை. ஆனால், 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அத்திப்பட்டு - புத்தூர் இடையே புதிய ரயில் பாதைக்கு 189 ஹெக்டேர், மொரப்பூர் - தருமபுரிக்கு 93 ஹெக்டேர், மன்னார்குடி - பட்டுக் கோட்டைக்கு 152 ஹெக்டேர், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை திட்டத்துக்கு 196 ஹெக்டேர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT