Published : 22 Dec 2024 04:46 AM
Last Updated : 22 Dec 2024 04:46 AM
மதுரை: வங்கிக் கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐஓபி வங்கியில் 2007-ல் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.42 கோடி மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, இடைத்தரகர்கள் கல்யாணசுந்தரம், மகாலிங்கம் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, தனது மருத்துவமனைக்கு டாப்ளர் ஸ்கேன் வாங்குவதற்காக போலி ஆவணங்களைக் கொடுத்து, ரூ.40 லட்சம் மோசடியாக கடன் பெற்றது தொடர்பாக சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி எஸ்.சண்முகவேல் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணியன், மகாலிங்கம், அம்மமுத்து பிள்ளை ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கல்யாண சுந்தரத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT