Published : 21 Dec 2024 06:35 PM
Last Updated : 21 Dec 2024 06:35 PM

“நெல்லையில் நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது” - அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்

புதுக்கோட்டை: “நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடந்தபிறகு, அதை தடுக்க கூடிய சக்தி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி தடுக்கும் சக்தி திமுக ஆட்சிக்கு இருக்கிறது. நாங்கள் தடுக்கிறோம்,” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எந்தச் சம்பவத்தையும் நடக்காமல் தடுக்க முடியாது. நெல்லையில், சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் இரு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டார்கள். மொத்தம் 4 குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் காவல் துறை விரைந்து செயல்பட்டு, இரண்டு மணி நேரத்துக்குள் 4 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக எதிர்க்கட்சிகள் காவல் துறையைப் பாராட்ட வேண்டும். அதைவிடுத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயம் ஆகும்?

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உங்களில் யாரோ ஒருவர் அரிவாளால் யாரையோ வெட்டப் போகிறீர்கள் என்று நாங்கள் நினைக்க முடியுமா? அமைச்சர் முன்னிலையிலேயே அரிவாள் வெட்டு என்பது போன்ற செய்தி வரும். எனவே, இதுபோன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது. இந்த கூட்டத்துக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு, அதை தடுக்க கூடிய சக்தி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி தடுக்கும் சக்தி திமுக ஆட்சிக்கு இருக்கிறது. நாங்கள் தடுக்கிறோம்,” என்றார்.

கோவை பாஷா இறுதி ஊர்வலம் குறித்த பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “ஒருவருடைய இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது. ஒரு பெருங்கூட்டம் அங்கு செல்கிறபோது, அங்கு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது அவசியம்தான். பாஷாவின் இறுதி ஊர்வலத்தின்போது, எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, போதுமான அளவு காவல் துறை பாதுகாப்பு வழங்கியதில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. பாஷா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் இறந்திருக்கிறார். எனவே, இதற்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. அந்த இறுதி ஊர்வலத்தில், இஸ்லாமியர்கள் பெருமளவில் சென்றதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.

சமூக விரோதிகளுக்கும், பல்வேறு வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்கும், ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கும், கட்சியில் சேர்த்து பதவிகளைக் கொடுப்பது இந்தியாவில் பாஜகவைத் தவிர வேறெந்த கட்சியும் கிடையாது. ஏற்கெனவே, பலமுறை இதை ஆதாரத்துடன் நாங்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். வேண்டுமெனில் மீண்டும் ஒருமுறை நாங்கள் பெயர் பட்டியலைத்தர நாங்கள் தயாராக இருக்கிறோம். திமுகவில் அதுபோன்ற நபர்களை கட்சியில் சேர்ப்பது கிடையாது. எங்காவது தவறி அதுபோல நடந்திருந்தால், முதல்வரின் உத்தரவின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிடுவார்கள்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x