Published : 21 Dec 2024 05:54 PM
Last Updated : 21 Dec 2024 05:54 PM
ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டங்கள், ஆய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு ஆணையர் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாலம் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு வரை போக்குவரத்து வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை கப்பல் பயணம், மீண்டும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை ரயில் ரயில் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரத்தின் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் தீவின் பாம்பன் வரை ரயில் பாலம் அமைக்கும் பணி 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பணி 1913-ம் ஆண்டு நிறைவடைந்தது. சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக 1914 பிப்ரவரி 24-ம் தேதி போட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த பாம்பன் ரயில் பாலத்தில், கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டன.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. 1.3.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், கரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன. கடந்த மாதம் பாலம் கட்டும் பணி முழுமையாக நிறைவடைந்தன.
கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் 2,078 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக பாலத்தின் நடுவே செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர். மேலும், அதன் அருகே 2 மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் ஆயுட்காலம் 58 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்கி நடத்தப்பட்ட சோதனை ஓட்டம், செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. கடந்த நவம்பர் 13, 14-ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். அவரது ஆய்வு அறிக்கையில், பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரிசெய்த பின்னரே ரயிலை முறைப்படி இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
5 பேர் குழு: இதைத் தொடர்ந்து குறைபாடுகளை சரிசெய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஏ.எம்.சவுத்ரி சுட்டிக்காட்டிய குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளனவா என்று ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்பு பாலம் பாதுகாப்பாக இருக்கிறதா என ஆய்வு செய்ய 5 பேர் குழு வரவுள்ளது. இக்குழு தனது அறிக்கையை ரயில்வே அமைச்சகத்துக்கும் அளிக்கும். அதன் அடிப்படையில் ரயில் பாலம் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்படும். இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் செயல் பட்டு வருகிறோம் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT