Published : 21 Dec 2024 05:27 PM
Last Updated : 21 Dec 2024 05:27 PM
டெபாசிட்டை இழக்குமளவுக்கு அதிமுக-வின் செல்வாக்கு சரிந்த போதும் யார் மீதும் கைவைக்க முடியாத இக்கட்டில் இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி. அதனால் ஆங்காங்கே அதிமுக-வுக்குள் அடிதடிகள் அரங்கேறுகின்றன. அதன் உச்சமாக, மாவட்டச் செயலாளரை மாற்றக் கோரி திருச்சி மாநகரின் 35 வட்டச் செயலாளர்கள் கையெழுத்திட்டு பழனிசாமியிடமே மனு கொடுத்திருக்கிறார்கள்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பின்னால் சென்ற பிறகு அந்தப் பதவி அப்போதைய மாநகர் மாணவரணி செயலாளரும் இபிஎஸ் ஆதரவாளருமான ஆவின் கார்த்திகேயனுக்கே கைகூடும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக, தினகரன் பக்கம் போய்விட்டு திரும்பிய ஜெ.சீனிவாசனை அந்தப் பதவியில் அமர்த்தினார் இபிஎஸ்.
இது திருச்சி அதிமுகவினர் மத்தியில் திகைப்பை ஏற்படுத்திய நிலையில், அமமுக-வில் இருந்து வந்தவர்களுக்கே பதவிகளை வாரி வழங்குவதாக சீனிவாசனுக்கு எதிராக சிலர் சிணுக்க ஆரம்பித்தார்கள். போதாதுக்கு, திமுக-வில் இருந்து வந்த நசீமா ஃபாரிக் என்பவரை சீனிவாசன் மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் ஆக்கியதும் அதிருப்தி கோஷ்டியை ஆத்திரப்பட வைத்தது.
இதுகுறித்தெல்லாம் கட்சித் தலைமைக்கு தொடர்ச்சியாக புகார்களை அனுப்பிய நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கள ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த போது அவரது எதிரிலேயே இரண்டு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். நொந்து போன தங்கமணி, “இப்படி நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியது தான்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
இதையே துருப்பாக வைத்து சீனிவாசனின் பதவிக்கு வேட்டுவைக்க கையெழுத்து இயக்கம் தொடங்கியது எதிர்க்கோஷ்டி. மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரான ஆவின் கார்த்திகேயன் இதன் பின்னணியில் இருப்பதாக ஒரு பேச்சு ஓடியது. இந்த நிலையில், சீனிவாசனை நீக்க வலியுறுத்தி 35 வட்டச் செயலாளர்கள் பழனிசாமியிடம் சேலத்துக்கே சென்று மனு கொடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய அவர்களில் சிலர், “ஆவின் கார்த்திகேயன், கட்சிக்கும் கட்சியினருக்கும் நிறையச் செலவு செய்துள்ளார். சீனிவாசன் கட்சியினரை கண்டு கொள்வதே இல்லை. வட்டச் செயலாளர்கள் சிலர் மாற்று வேட்டி வாங்கக்கூட வழியில்லாமல் உள்ளனர். அவர்களை எல்லாம் கண்டுகொள்ள ஆளில்லை. இப்படியே போனால் திருச்சியில் அதிமுக என்ற கட்சி இருந்த அடையாளமே இல்லாமல் போய்விடும்” என்றனர்.
மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசனோ, “ஆவின் கார்த்திகேயன் சென்னை அண்ணாநகரில் வீடு வாங்கி அங்கு குடியேறிவிட்டார். இங்கு வருவதே இல்லை. கட்சியின் திட்டமிட்டு சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். நசீமா ஃபாரிக் வெல்லமண்டி நடராஜன் காலத்திலிருந்தே அதிமுக-வில் பொறுப்பில் இருக்கிறார். துணை பொறுப்பிலிருந்த அவருக்கு செயலாளர் பொறுப்பு இயல்பாகவே வந்துள்ளது” என்றார்.
சீனிவாசனை நீக்க மெனக்கிடுகிறீர்களாமே என ஆவின் கார்த்திகேயனைக் கேட்டதற்கு, “யாரையும் காலி செய்துவிட்டு நான் பதவி வாங்க வேண்டியதில்லை. மாநகர் மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி நான் யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை. என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இப்படியான தகவலை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். எனக்கு அது வேலையில்லை.
அதிருப்தியில் இருப்பவர்கள், நேரடியாக தலைமையிடம் முறையிடலாம். நான் அந்த வேலையைச் செய்ய மாட்டேன்” என்றார். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற சினிமா வசனம் போல ஒரு காலத்தில் எப்படியாகப்பட்ட ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த அதிமுக இப்போது இப்படி ஆகிவிட்டதே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT