Published : 21 Dec 2024 05:13 PM
Last Updated : 21 Dec 2024 05:13 PM
பொதுவாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினால் அதிகாரிகள் தங்கள் மீது எந்தக் குறையும் வராத அளவுக்கு அனைத்தையும் ‘செட் செய்து’ வைத்துவிடுவார்கள். இதன் மூலம் பிரச்சினையின் நிஜ நிலவரம் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஆனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் அப்படியான செட்டப்ஸீன்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
உதயநிதி ஆய்வுக்கூட்டம் நடத்தும் மாவட்டங்களுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே அதிகாரிகள் குழு ஒன்று களத்தில் இறங்கி ரகசியமாக ஆய்வு நடத்துகிறது. இவர்கள் தரும் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு ஆய்வுக் கூட்டத்தில் அமர்கிறார் உதயநிதி. இது தெரியாமல் அதிகாரிகள் யாராவது உண்மை நிலவரத்தை மறைத்து பதிலளித்தால், தன்னிடம் உள்ள தரவுகளை எடுத்துப் போட்டு திகைக்க வைக்கிறார் உதயநிதி.
இப்படித்தான் கடந்த 18-ம் தேதி திருப்பூர் மாவட்ட ஆய்வுக்கூட்டம் உதயநிதி தலைமையில் நடந்தது. பொங்கலூர் சிங்கனூர் பள்ளியில் காலை உணவை சமைத்துவைத்துவிட்டு சமையலர் சொந்த வேலையாக வெளியே சென்றிருக்கிறார். இதுகுறித்து துணை முதல்வரின் ஸ்பெஷல் டீம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.
ஆயுவுக் கூட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய உதயநிதி, “அந்த உணவின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? குழந்தைகள் சாப்பாட்டு விஷயத்தில் இப்படிச் செய்யலாமா? இது தொடர்பாக சமையலருக்கு உரிய பயிற்சி தரவில்லையா?” எனக் கேள்விகளால் துளைக்க, அதிகாரிகள் திணறிப் போனார்கள்.
அவிநாசி வட்டத்தில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது தொடர்பான மனுக்கள் அதிகமாக தள்ளுபடி ஆவது ஏன் என வருவாய்த்துறையினருக்கு கேள்வி எழுப்பினார் உதயநிதி. இதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் மழுப்பலாகவே பதில் சொல்ல, “இது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என சிடுசிடுத்தார்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருப்பது, பள்ளிக்கு குழந்தைகள் வருகை குறைந்திருப்பது, குழந்தை திருமணங்கள் மற்றும் போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட சமாச்சாரங்கள் தொடர்பாகவும் புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு கேள்வி எழுப்பியவர், அண்மையில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் உதட்டைப் பிதுக்கினார்.
உடுமலை ஆமந்தக்கடவு பகுதி மக்கள் குடி தண்ணீர் வசதி கேட்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவை கையோடு எடுத்து வந்திருந்த உதயநிதி, “இவர்கள் மனு கொடுத்து 6 மாதங்களான பிறகும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என சம்பந்தப்பட்ட பிடிஓ-வை கிடுக்குப்பிடி போட்டார்.
அதற்கு அவர், “சரி செய்கிறேன் சார்” என மலுப்பவே, அப்போதே ‘முதல்வன்’ பட பாணியில் மனுதாரருக்கு போன் போட்டவர், மறுமுனையில் பேசிய மனுதாரர், “இன்னும் பிரச்சினை தீரவில்லை சார்...” என்று சொன்னதை லவுட் ஸ்பீக்கரில் அனைவருக்கும் கேட்கும்படி ஒலிக்க விட்டார். இதேபோல், இன்னும் 4 பேருக்கு போன் போட்டு அவர்களையும் பேசவைத்து அதிகாரிகளை அசரவைத்தார்.
“மாவட்ட அளவில் வரும் புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத போதுதான் சிஎம் செல்லுக்கு புகார்கள் வந்து குவிகின்றன. இதனால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது. இனிமேல், சிஎம் செல்லுக்கு புகார்கள் வரக்கூடாது. அப்படி வராதபடிக்கு உங்களிடம் வரும் மனுக்களுக்கு உரிய தீர்வை நீங்களே சொல்லிவிடுங்கள்” - இதுதான் திருப்பூர் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் அதிகாரிகளுக்கு உதயநிதி போட்டுவிட்டுச் சென்றிருக்கும் கண்டிப்பான உத்தரவு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT