Published : 21 Dec 2024 05:02 PM
Last Updated : 21 Dec 2024 05:02 PM
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக ஆளுநர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுக்களை அமைத்தது, யுஜிசி விதிமுறைகளுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கும் முரணானது. எனவே, அந்த தேடுதல் குழுக்களை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி இருந்தார்.
ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், “பல்கலைக்கழக துணைவேந்தர் காலியிடங்களை நிரப்பி, நிர்வாகத்தை செம்மைப்படுத்த ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு, ஏற்கெனவே தெரிவித்த செய்தியையே திரும்ப தேதியை மாற்றி அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனை அளிக்கிறது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பது ஆளுநரின் உள்நோக்கமாக உள்ளது.
மாநில அரசால் ஏற்கெனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உள்ள சரத்துகளுக்கு உட்பட்டே யுஜிசி நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போதே தேடுதல் குழு அமைக்க சார்ந்த பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படியே தற்போது துணைவேந்தருக்கான தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யுஜிசி நெறிமுறைகள் பரிந்துரை மட்டுமே. அதை அப்படியே கட்டாயம் மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகளை நிர்ப்பந்தப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு அரசியல் உள்நோக்கோடு கொடுக்கும் நெருக்கடி ஆகும். இதை ஆளுநர் தவிர்த்து பல்கலைக்கழகங்கள் கல்விப்பணியாற்ற வழிவிட வேண்டும்.
பல்கலைக்கழகங்களுக்கு மாநில ஆளுநர் வேந்தராக இருப்பதை காரணம் காட்டி பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை குட்டுவைத்தும் தனது செய்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது மட்டுமல்ல - ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதும் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தியும், குறைத்தும் வருகிறது. இதனால் பல பல்கலைக்கழங்களின் நிதி நிலைமை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதை பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற பொறுப்பில் உள்ள ஆளுநர் தட்டிக் கேட்பதில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாமல் பல்கலைக்கழகங்களை முடக்கும் மத்திய அரசின் செயல்பாட்டை மறைக்கவே - பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் இப்படி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
நிர்வாகக் குளறுபடிகளுக்கு காரணமான தனது செயல்களை ஆளுநர் இனியாவது நிறுத்தி, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டும். யுஜிசி பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஆளுநர், முடிந்தால் யுஜிசியிடம் அதிக நிதியை தமிழக பல்கலைக்கழகங்களுக்கு பெற்றுத் தரலாமே. மொழி உரிமை, கல்வி உரிமை போராட்டங்களைக் கண்ட தமிழகத்தில் ஆளுநர் தனது அரசியலைக் கைவிட வேண்டும். துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தை தமிழக அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும்” என்று அவர் கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > அண்ணா, பாரதிதாசன், பெரியார் பல்கலை.க்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும்: ஆளுநர் அறிவுறுத்தல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT