Published : 21 Dec 2024 06:35 AM
Last Updated : 21 Dec 2024 06:35 AM
சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தார்.
இந்த உணவு திருவிழாவானது டிச.24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பார்வையாளர் கள் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். உணவுத் திருவிழாவில் 65 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் மொத்தம் 35 உணவு அரங்குகள், 7 தயார் நிலை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு 100 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
உணவுப் பட்டியலை ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ‘க்யூ-ஆர்’ கோடுகளை ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் பணம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கவுன்ட்டர்களில் ‘க்யூ-ஆர்’ கார்டுகளை ‘டாப்-அப்’ செய்து அரங்குகளில் இருக்கும் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
வாகன நிறுத்தம் வசதி: இதுதவிர 3 அரங்குகளில் சுய உதவிக் குழுக்களின் 45 வகையான தயாரிப்பு பொருட்களும் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன.
இத்துடன் மக்களை கவர இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின் றன. மெரினா கடற்கரை அருகே உள்ள சென்னை பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகங்களில் வாகன நிறுத்தங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழா குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்முறையாக சென்னையில் உணவுத் திருவிழாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இது நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தி லும் அங்கு பிரபலமாகக் கருதப்படும் உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. குறைந்த விலையில், தரமாக உணவுகள் வழங்கப்படும். இந்த உணவுத் திருவிழா மூலம் தமிழக அரசுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மக்கள் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு, உணவுகளை ருசிக்க வேண்டும். உணவுத் திருவிழாவுக்கு கிடைக்கும் ஆதர வின் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப் படுவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT