Published : 21 Dec 2024 05:50 AM
Last Updated : 21 Dec 2024 05:50 AM

அலோபதி - ஆயுஷ் மருத்துவத்தின் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் பல நோய்களுக்கு தீர்வு: துணைவேந்தர் நாராயணசாமி

சென்னை: அலோபதி - ஆயுஷ் மருத்துவம் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ‘அலோபதி - ஆயுஷ் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் - 2024’ என்ற மாநாட்டை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:

அலோபதி மருத்துவம் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது. ஆனாலும், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் (ஆயுஷ்) வருமுன் காத்தல், வந்தபின் தற்காத்தல் முறையில் சிறந்த பலனை அளிக்கும்.

‘உணவே மருந்து - மருந்தே உணவு’ என்பது இந்திய மருத்துவ முறை சிகிச்சை ஆகும். இந்த அடிப்படையில், பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க முடியும். வந்த நோயின் தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

எந்தெந்த நோய்களின் பாதிப்புகளுக்கு அலோபதி - ஆயுஷ் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை தீர்வு ஏற்படுத்தும் என இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, நிமோனியா காய்ச்சலுக்கு அலோபதி மற்றும் இந்திய மருத்துவ முறையில் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும், ஒருங்கிணைந்த சிகிச்சை அளித்தால், பாதிக்கப்பட்டோர் விரைந்து குணமடைய வாய்ப்பு உள்ளது. நாள்பட்ட நோயாளிகளுக்கும், ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை முறைகள் சிறந்த தீர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x