Published : 21 Dec 2024 06:17 AM
Last Updated : 21 Dec 2024 06:17 AM

தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசு சேவை குறித்து ஜனவரியில் விழிப்புணர்வு வாரம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்து வகையில் வரும் ஜனவரி மாதத்தில் ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளர்.

வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு, மின்னாளுகையை படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன்மூலம் முழுமையான அரசாங்கத்தை எய்திடும் வகையில் ‘டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்’ தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசின் நிர்வாகத்திறன், டிஜிட்டல் இணைப்புகள், அரசின் சேவை வழங்கலை மேம்படுத்த தமிழகத்தில் முதல்முறையாக ‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்’ வகுக்கப்பட்டது.

அரசின் துறைகள் தங்களுக்கான டிஜிட்டல் உருமாற்ற வியூகம் உருவாக்குவதற்காக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்’ ஆவணத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 நவ.2-ம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையை வலுப்படுத்தி, அனைத்து பொதுமக்களுக்கும் அரசு சேவைகள் வசதியாக கிடைப்பதை உறுதி செய்வது இதன் முக்கிய அம்சமாகும்.

இதையொட்டி டிஜிட்டல் உட்கட்டமைப்பை கிராமப்புற மக்களுக்கு வழங்குதல், மாநிலத்தை தொழில் முனைவு மையமாக மாற்றுதல், நவீன செயலிகள், வலைத்தளங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை ‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்’ செயல்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் திட்டங்கள் தொடர்பாக வரும் 2025 ஜனவரி மாதத்தில் ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x