Published : 21 Dec 2024 05:30 AM
Last Updated : 21 Dec 2024 05:30 AM
சென்னை: சென்னை - பினாங்கு நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொடங்குகிறது. மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு மாநிலமான பினாங்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது.
அங்கு தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்தியாவில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவை இயக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை - பினாங்கு - சென்னை இடையே தினசரி நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று தொடங்குகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2.15 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலையில் பினாங்கு தீவுக்கு செல்லும். பின்னர், பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த விமானம், 186 பேர் பயணிக்க கூடிய ஏர் பஸ் 320 ரகத்தை சேர்ந்தது. சென்னை - பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். சென்னையில் இருந்து பினாங்குக்கும், பினாங்கில் இருந்து சென்னைக்கும் தலா ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, சென்னையில் இருந்து பினாங்கு செல்ல வேண்டும் என்றால், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பினாங்கு செல்ல வேண்டும். இதனால், அதிக நேரம் ஆகும். 2025-ம் ஆண்டு ஜனவரியில் பினாங்கில் 8-வது ஆண்டாக மாநாடு, கண்காட்சி, ரோட் ஷோ நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனை கண்டுகளிக்க தமிழர்கள் பினாங்கு வந்து செல்வதற்கு இந்த நேரடி விமான சேவை பெரிய உதவியாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT