Published : 21 Dec 2024 03:18 AM
Last Updated : 21 Dec 2024 03:18 AM
தமிழகத்தில் பொருளாதார நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையை தமிழக அரசு பரிசீலித்து அமல்படுத்த வேண்டுமென கல்வியாளர் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (Economically Weaker Section) அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 5 ஆண்டுகளாகின்றன. இந்த ஒதுக்கீட்டின்படி தகுதியானவர்கள் யார் என்பதை மத்திய அரசு வரையறை செய்துள்ளது. மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற்ப உரிய தகுதிகள் குறித்து வரையறை செய்து கொள்ளலாம். இந்த ஒதுக்கீட்டு கொள்கையை சிறப்பானது என்று பொருளாதார வல்லுநர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.
இதுதவிர பொருளாதார அடிப்படை இடஒதுக்கீட்டை தங்கள் சூழலுக்கு ஏற்ப மேற்கு வங்கம், கேரளா உட்பட 15 மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன. இது தற்போதைய இடஒதுக்கீட்டின் கீழ் இடம்பெறும் இதர பிரிவினருக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. சமூக நீதியில் எப்போதுமே நமது தமிழகம்தான் முன்னணி வகித்து வருகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீடு முறை குறித்து இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.
சமூக நீதியின் இயல்பு அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பதுதான். அதன்படி சமூக சமநிலையின்மை மற்றும் பொருளாதாரச் சமநிலையின்மை ஆகிய இரு பிரச்னைகளிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும். எனவே, சமூக நீதியைச் செயல்படுத்துவதில், எந்த வகையான பிற்படுதலின் அடையாளங்களும் விடுபடக்கூடாது. வறுமை என்பதும் ஒருவிதத்தில் பிற்படுத்தப்படுதலே ஆகும். தமிழக மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழே இருப்போர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் பலர் பொதுப்பிரிவின் கீழ் வருபவர்கள். தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு திட்டங்களின் கீழ் பலன் பெறுவதில்லை. எனவே, பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT