Published : 21 Dec 2024 01:48 AM
Last Updated : 21 Dec 2024 01:48 AM
சென்னை அண்ணா, திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களில் யுஜிசி உறுப்பினர் இல்லாததால் அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு நியமித்த தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் இடம்பெறாததால் அந்த தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், இதற்கு பதில் அளித்த பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன், அண்ணாமலை பல்கலைக்கழக சட்டப்பிரிவுகளின்படியே தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்விடாமல் ஆளுநர் பல்வேறு வழிகளில் இடையூறு செய்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு நியமித்த தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் இடம்பெறாததால் அந்த தேடுதல் குழுக்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்யும் வகையில் மாநில பல்கலைக்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர் தேடுதல் குழுக்களை அமைத்தார். அப்பல்கலைக்கழகங்களின் சட்டங்கள் மற்றும் யுஜிசி விதிமுறைகளின்படி தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி பிரதிநிதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும் பாகுபாடு இல்லாமலும் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஆளுநர் தேடுதல் குழுக்களை அமைத்துள்ளார். யுஜிசி உறுப்பினருடன் கூடிய தேடுல் குழுக்களின் நியமனத்தை அரசிதழில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உயர்கல்வித் துறை மேற்குறிப்பிட்ட 3 பல்கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுக்களை அமைத்து அதுதொடர்பான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்த தேடுதல் குழுக்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, யுஜிசி உறுப்பினர் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் அறிவிக்கைகள் யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கும் முரணானது. யுஜிசி உறுப்பினர் இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் தேர்வு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும். பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் துணைவேந்தரின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களின் நலனுக்காக துணைவேந்தர் பதவிகள் காலியாக வைக்கப்படவில்லை.
அண்ணா, பாரதிதாசன், பெரியார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுக்களை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேந்தர் அறிவுரை வழங்கியுள்ளார். யுஜிசி உறுப்பினருடன் வேந்தர் அமைத்த தேடுதல் குழுக்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கைகளை அரசிதழில் வெளியிட அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT