Published : 21 Dec 2024 01:43 AM
Last Updated : 21 Dec 2024 01:43 AM
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவள்ளுவருக்கு அமைத்த சிலையை பேரறிவுச் சிலையாக கொண்டாடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவினார். இச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால், தமிழக அரசு வெள்ளிவிழா கொண்டாடவுள்ளது. அதற்காக வரும் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளன. அதில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகளும், மாவட்ட நூலகங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. இதையொட்டி, 'வள்ளுவம் போற்றுவோம் - வெள்ளி விழா 25' இலச்சினையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பதிவில், “சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயர சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25. மூப்பிலா தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த சிலையை “பேரறிவுச் சிலை”-ஆகக் (Statue of Wisdom) கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவில், “இந்தியாவின் தொடக்கப் புள்ளியான குமரி முனையில், திருக்குறள் தந்த அய்யன் வள்ளுவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 133 அடியில் திருவுருவச் சிலை எழுப்பி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த சிறப்புக்குரிய தருணத்தில், வள்ளுவரின் சிலைக்கு பேரறிவுச் சிலை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளது பெருமகிழ்ச்சி. State Of Social Justice-ன் அடையாளமாக Statue Of Wisdom இன்னும் பல நூறாண்டுகள் வானுயர்ந்து நிற்கட்டும். வாழ்க வள்ளுவர் புகழ்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT