Published : 20 Dec 2024 10:23 PM
Last Updated : 20 Dec 2024 10:23 PM
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை (டிச.20) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் மாநகர் எல்.ரெக்ஸ், தெற்கு கோவிந்தராஜ், வடக்கு கலை, மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மண்டல பொறுப்பாளர் பெனட் அந்தோணிராஜ், திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தெய்வேந்திரன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய பாராளுமன்றம் எதிரே எதிர்கட்சிகள் போராடுவது வழக்கம். ஆனால் ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பியது, கலவரத்தில் ஈடுபட்டது ஜனநாயகத்தில் காணாத காட்சி.
எதிர்கட்சிகள் போராடினாலும் அவர்களை சமாதானம் செய்து, ஆட்சியாளர்கள் சபையை நடத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியினரே போராடுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது.
ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தப் போடப்பட்ட பொய் வழக்கு. இதன்மூலம் ராகுல் காந்தி செல்வாக்கை, உயர்வை, வளர்ச்சியை பாஜகவால் தடுத்துவிட முடியாது.
இந்திய ஜனநாயக வரலாற்றில் பாராளுமன்றத்துக்குள் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது குற்ற வழக்குப் போட்டது இதுவே முதல் முறை. எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினால் எஃப்ஐஆர் போடுவார்கள் போல. கீழ்த்தரமான நிலைமை போய்கொண்டிருக்கிறது.
ராகுல் காந்தி மீது போட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும். அம்பேத்கர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்” இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT