Published : 20 Dec 2024 07:10 PM
Last Updated : 20 Dec 2024 07:10 PM
நாகர்கோவில்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பால பணிகளை ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு பாலத்தை வருகிற 30ந் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த பால பணியினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடர்ந்து 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "நெடுஞ்சாலைத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தின் தரைத்தளப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அன்று முதலமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று இரண்டாம் நாளாக நான் பார்வையிட்டதோடு, சீரமைப்பு பணிகள் மற்றும் தரைத்தள பணிகளையும், பாலப்பணிகளையும் ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிப்பதற்கு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். கட்டுமான பணிகளின் உறுதி தன்மையினை உறுதிப்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்வார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவு சீட்டு எடுக்க வரிசையில் நிற்கும் நிழற்குடை பழுதுடைந்து உள்ளதாலும், போதுமான அளவு இடவசதிகள் இல்லமால் இருந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் பருவ சீதோசனங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவும், பழுதடைந்த நிழற்குடையினை சீரமைத்து, நுழைவு சீட்டு எடுப்பதற்கு செல்லும் பகுதிகளை அதிகரித்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளை துரிதமாக மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
ஆய்வில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு ஆய்வாளர் பாஸ்கர், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT