Published : 20 Dec 2024 07:05 PM
Last Updated : 20 Dec 2024 07:05 PM
புதுச்சேரி: புதுச்சேரி புயல் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உட்பட தனிநபர் தகவல்களை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நிறுவனம் சேகரிப்பதற்கு தடை விதிக்கக் கோரி திமுக மகளிர் அணியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திமுக மகளிரணி அமைப்பாளர் காயத்ரி, செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி தலைமையில் மகளிரணியினர் ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து இன்று (டிச.20) மனு அளித்தனர். இதுதொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது: “புயல் வெள்ள நிவாரணம் மக்களுக்கு கொடுப்பதற்காக, சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தெளிவான காரணங்களையும், முறையான அனுமதியும் ஒப்புதலைப் பெறாமல் பயனாளிகளிடமிருந்து தனிப்பட்ட விவரங்களான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, போட்டோ உள்ளிட்ட தொடர்பு விவரங்களை சேகரிக்கின்றனர்.
புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், தனிப்பட்ட தரவுகளின் அங்கீகரிக்கப்படாத சேகரிப்பு தீவிர நெறிமுறை, சட்ட மற்றும் தனியுரிமை அச்சுறுத்தலை எழுப்புகிறது. இத்தகைய நடைமுறைகள் விதிமீறலாகும். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற புயல் வெள்ள நிவாரணம் அளிக்கும் போது தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஜோஸ் சார்லஸ் மார்டின் நிறுவனத்திற்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாரே செயல்படுவது வேதனைக்குரியது.
இந்த தனிநபர் தகவல்கள் சேகரிப்பு நடைமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் தனிநபர் தகவல்கள் சேகரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து நெறிமுறைப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT