Published : 20 Dec 2024 06:10 AM
Last Updated : 20 Dec 2024 06:10 AM

திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே மக்களுக்கு புண்ணியம்: தமிழிசை விமர்சனம்

சென்னை: பல வகையிலும் ஏழை மக்களின் பாவங்களை சேர்த்த திமுகவை, 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினும், ‘‘அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்’’ என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்தை தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஞ்ஞானபூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் திமுகவினர். சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக, கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான். திமுக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து பாவங்களை சேர்த்துக் கொண்டது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், அவர்களது குடும்பத்தினரின் பாவத்தையும் திமுக சேர்த்துள்ளது. வேங்கைவயலில் மனித கழிவு கலந்த தண்ணீரை ஊர் மக்கள் குடித்து பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில், இன்றளவும் யார் அதை செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் ஊர் மக்களின் பாவத்தை வாங்கிக்கொண்டதும் திமுகதான்.

இப்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அம்பேத்கர் பற்றி திமுக பேசுவது நியாயமா. ‘சென்னையில் ரூ.4,000 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைத்து விட்டோம்’ என்று கூறிக்கொள்ளும் திமுக, மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பாவங்களையும் வாங்கிக் கொண்டது. ஊழல் செய்வதையே குடும்ப தொழிலாக்கி, ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த, நிர்வாக திறனற்ற திமுகவை 2026 -ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x